NewTamilWorld
 
 

Homepage 

பாரதப் பிரதமருக்கு கவே. கரிகாலன் எழுதும் ஒரு பகிரங்கக் கடிதம்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2009, 04:47.03 PM GMT +05:30 ]
 

வல்லரசாய் வளர்ந்துவரும் பாரததேசத்தின் பிரதமருக்கு தமிழீழத்துக் காடுகளில் கஞ்சிக்கும் வழியற்று கந்தகக் காற்றினைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் கடைக்கோடி தமிழர்களின் சார்பாய் கரிகாலன் எழுதுவது!
 

01-03-2009

வல்லரசாய் வளர்ந்துவரும் பாரததேசத்தின் பிரதமருக்கு தமிழீழத்துக் காடுகளில் கஞ்சிக்கும் வளியற்று கந்தகக்காற்றினைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் கடைக்கோடி தமிழர்களின் சார்பாய் கரிகாலன் எழுதுவது!

யாம்; சுடுகலன்கள் துப்பும் சுவாலைகளுக்கிடையிலும், வானூர்திகள் கொட்டும் கொத்துக்குண்டுகளுக்கு நடுவிலும் தூரத்தேநின்று துரத்திவிடும் எறிகணைகளுக்கு மத்தியிலும் உயிருடன் மட்டுமே இருக்கிறோம். தங்களுக்குச் சமீபத்தில் சத்திரசிகிச்சை செய்ததினால் தாங்களும் சற்று உடல்நலக்குறைவிலேயே இருப்பீர்களென ஊகிக்கின்றேன். உங்களின் நலத்திற்கும் எங்களின் உயிருக்கும் எப்போதும் ஏங்கி மன்றாடும் எமையாளும் ஈசனிடம் இறைஞ்சுகின்றேன்.

“தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு” தமிழ்மொழியும் தமிழினமும் மிகவம் தொன்மை வாய்ந்தது. இற்றைக்கு இருபது இலட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே இம்மொழியும், இனமும் இப்பூமிப்பந்தில் வாழ்ந்து வந்துகொண்டிருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். பகுறொளியாற்றின் பன்மலையடக்கம் அழிந்துபோனாலும் அழியாத சில சான்றுகள் மூலமும் ஆராயப்பட்ட பல ஆய்வுகள் மூலமும் மெய்ப்பிக்கப்பட்டுள்ள உண்மை. ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு, தனிப்பண்பாடு உண்டு. தங்களினமானவர்கள் தலையிலே தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள், அரேபியர்கள் தலையிலே வெண்துண்டு இட்டுக்கொள்வார்கள், இவ்வாறே எம்மினத்திற்கும் ஒரு தனித்துவமான பண்பு அது மானம். மானத்திற்க்குப் பெயரெடுத்தது கவரிமான் தான், அவ்வாறானதொரு இயல்பு எம்மினத்திற்குமுண்டு.

இந்தியாவை நல்லாட்சி செய்து தமக்கென்று தனிவரலாறு எழுதிவைத்த தமிழரசர்கள் ஏராளமானவர்கள். போரிலே சிறைப்பட்ட கைதிக்கு தன் காவலனால் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கத் தாமதமானது தன்னாட்சிக்கும் தன்மானத்திற்குமேற்பட்ட இழுக்கென நினைத்து பாட்டெழுதி வைத்துவிட்டு தன்னுயிரைத் துறந்தான் மாமன்னன் சேரமான் கணைக்கால இரும்பொறை. தன்னுடைய தீர்ப்புத் தவறாகிவிட்டதே என்பதையுணர்ந்து தன்னுயிரையே துறந்தவன் நீதிவழுவா நெடுவரசன் பாண்டிய நெடுஞ்செழியன். தவறுதலாகத் தேர்ச்சக்கரத்தினால் பசுக்கன்றினைக் கொன்றதற்காக, தன்மகனையே தேர்ச்சக்கரத்தில் நசித்து மரணதண்டனை கொடுத்த மனுநீதிகணடசோழனும் ஒரு மானத்தமிழரசன்தான். இமயத்தை வென்று புலிக்கொடி நாட்டிய பெருவளத்தான் கரிகாலனும் தமிழரசன்தான். அஃகுதே தமிழனுக்கு மானமும் வீரமும் உயிரோடும் உடலோடும் ஒட்டியதொன்றாகும்;.

பாரததேசத்திற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசுக்கு எதிராக இந்தியர்கள் எவ்வாறன பேராட்டங்கள் நடத்தினார்கள் என்பது தாங்கள் அறியாதது அல்ல. சுதந்திரப்போராட்டத்தின் ரணமும் வலியும் தாங்களறியாததா? அகிம்சை ரீதியான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த அதேவேளை நேதாஜி சுபாஸ் சந்திரபோஷின் தலைமையினாலான ஆயுதப்படையினரால் அவ்வரசுக்கெதிராக ஆயுதந்தாங்கிய போராட்டங்களும் நடந்தேறின என்பதினை எவராலும் மறுக்கமுடியாது. பாரதத்தின் சுதந்திரம் வெறுமனவே அகிம்சை வழிப்போராட்டத்தினால் மட்டும் கிடைத்ததல்ல என்பது என்கருத்து. எது எவ்வாறாயினும் பலரினது தியாகத்தினாலும் வீரத்தினாலும் விலைமதிக்கமுடியாத சுதந்திரத்தினை அடைந்தீர்கள், அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அறுபத்திரண்டு ஆண்டுகள் சான்று. தாங்கள் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்கு போராடிய கட்சிகளுள் மிகமுக்கியமானதுதான்.

ஆயினும் சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுமாறு தேசபிதா மகாத்மா காந்தி அடிகள் கூறியிருந்தார், ஆனால் ஏனோ அப்போது காங்கிரஸ் கட்சியிலுள்ளவர்கள் அதனை ஏற்கவில்லை. சுதநதிரம் கிடைத்தபோது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் திரு. நேரு அவர்கள் முக்கிய ஒரு தீர்மானத்தை, கொள்கையை வெளியிட்டார். உலகின் எந்த மூலையிலும் எந்த நாட்டிலும் நடைபெறும் எந்தவொரு சுதந்திரப் போராட்டத்திற்க்கும் இந்தியதேசம் குறிப்பாக காங்கிரஸ் கட்சி அனுசரணை வழங்கும் ஆதரிக்கும் என்பதாகும.; நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தேசிய கட்சியில் (காங்கிரஸ் கட்சி) தாங்கள் முக்கியமானவர் என்ற ரீதியிலேயே இதனையெல்லாம் தங்களுக்கு எழுதுகின்றேன்.

இவ்வாறெல்லாம் கொள்கையையுடைய தங்கள் காங்கிரஸ் கட்சி ஏனே எங்களினது சுதந்திரப் போராட்டத்தினை மட்டும் தீவிரவாதம், பயங்கரவாதம் எனப் பெயரிட்டு ஒதுக்குகிறீர்கள் என்பதை எனக்கு விளக்குவீர்களா? நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் தலைமையினாலான சுதந்திரத்திற்க்கான ஆயுதப்படையினை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என எவராவது சொல்லிருந்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? ஏங்களின் சுதந்திரப்போராட்டத்தினை இந்தியாவும் ஏனைய நாடுகளும் ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்தியேழிலிருந்தே பார்க்கின்றார்கள். இதனைத் தாங்களும் சற்று முன்நோக்கிப்பார்க்க வேண்டுமென தங்களை நான் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தியாவும் இலங்கையும் புவியியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தொடர்புடையது என்பதை நான் கூறி நீங்களறியத் தேவையில்லை. எல்லோருமறிந்த வகையில் கூறுவதாயின் இதிகாச காலத்திலேயே இந்தியாவும் இலங்கைத்தீவும் தொடர்புபட்டது. இராமாயணத்தினை எடுத்துக்கொண்டோமேயானால் இந்தியாவில் இராமபிரானும் இலங்கைத்தீவில் இராவணன் என்ற தமிழ் மன்னனும் வாழ்ந்து வந்தார்களென தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அதுக்கடுத்த கட்டத்தைப் பார்த்தோமேயானால் இந்தியாவையாண்ட காலனித்துவ ஆட்சியாளர்கள் சமகாலத்திலே இலங்கைத் தீவினையும் ஆட்சிசெய்து கொண்டார்கள். அப்பொழுதெல்லாம் இலங்கைத்தீவில் இரண்டு இராச்சியங்கள் இருந்து வந்துள்ளன என்பதனை அந்தந்த ஆட்சியாளர்களும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள், பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையம் தாங்களறிவீர்கள்.

பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே ஒல்லாந்தர்கள் இலங்கைத் தீவிற்க்குள் முதல் காலடியெடுத்து வைத்தனர். ஆயிரத்து அறுநூற்றுப் பத்தொன்பதில் தமிழ் மன்னர்களையெல்லாம் தோற்கடித்து இராச்சியங்களைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்து இறுதிமன்னன் சங்கிலி குமாரனைத் தூக்கிலிட்டனர். அதன்பின் ஆயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றொன்பதில் ஒல்லாந்தரிடமிருந்து ஆட்சியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கில் தமிழர்களும், தெற்கில் சிங்களவர்களுமாக இரண்டு இராச்சியங்களாக இருந்ததை ஆயிரத்து எண்நூற்று முப்பத்துமூன்றில் ஆங்கிலேயர் தங்களது நிர்வாக இலகுக்காக ஒன்றாக்கி தீவினை ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவந்தனர். கிட்டத்தட்ட நூற்றுப் பதினைந்து ஆண்டுகளாகத் தங்களது  காலனித்துவ ஆட்சியிலிருந்த இலங்கைத்தீவிற்கு ஆயிரத்து தொழாயிரத்து நாப்பத்தெட்டில்; ஆங்கிலேயர் சுதந்திரம் கொடுத்து இலங்கை விட்டு வெளீயேறினர். ஆங்கிலேயர்கள்; பிரவேசிக்கும்போதிருந்த இரட்டை ஆட்சிகளை ஒன்றாக்கி ஆட்சிசெய்தவர்கள் வெளியேறும்போது அவ்வொற்றையாட்சியினை பெரும்பான்மை இனமாகிய சிங்களவர்களின் கையில் தாரைவார்த்தனர்.

இதுவே இலங்கைத்தீவிலே வாழ்ந்த தமிழர்களின் முதல் ஏமாற்றம். அதன்பின் ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தாறில் நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்களம் என்ற சட்டமும் தமிழர்களின் உரிமைகளைப் பறித்ததோடு, அகிம்சையாய் காந்திய வழியில் போராடிய தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டதோடு சிங்கள அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தாறு, ஐம்பத்தெட்டு, அறுபத்தொன்று, எழுபத்திநான்கு, எழுபத்தொன்பது, எண்பத்தொன்று, எண்பத்துமூன்று ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழினஅழிப்பிற்க்கான கலவரங்களையும், அதனால் சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துடமையும், சிங்களவர்களால் காவுகொள்ளப்பட்ட தமிழுயிர்களும், தாங்களறியாததல்ல. இவ்வாறாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்ந்து அகிம்சை வழியிலேயே போராடினார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் அவ்வகிம்சைக்கு சிங்களஅரசு தமிழர்களுக்குத் தந்த தீர்வுகளும் பிராயச்சித்தமும் சிறையும் உயிப்பலியும்ந்தான் என்பதை தாங்களுமறிவீர்கள்.

இடையிடையே சிங்களஆட்சியாளர்கள் தமிழ்த்தலைவர்களுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை கிழித்தெறந்ததும் அதனை நிறைவேற்றாமல் எம்மை நிர்க்கதியாக்கியதும் உங்களுக்கு நினைவில்லாமலிருக்காமா? இவ்வாறு தொடர்ந்த அகிம்சைரீதியான போராட்டத்தை சிங்கள இனவாத அரசு ஆயுதங்கொண்டு அடக்கியாண்டதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து தமிழ்ச்சாதியினை வஞ்சித்த வக்கிரமுடையவர்களிடமிருந்து எம்முயிரைப் பாதுகாக்க, தற்காப்பாகவே, நாம் ஆயுதமேந்தினோம், அதனை முன்னைநாள் இந்தியப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவரகளும் ஏற்றுக்கொண்டு, அ+தரித்து அப்போது சில உதவிகளையும் நல்கியிருந்தார்கள். அதற்கு இன்றும் தமிழீழத்துத்தமிழர்கள் நன்றியுடையவர்களாவே இருக்கின்றனர்;. எமது உண்மையான பிரச்சினையையும் அதற்குகந்த தீர்வினையுமுணர்ந்த ஒரேயொரு இந்தியப்பிரதமர் அன்னை இந்திரா அவர்களாகத்தானிருக்குமென நான் நம்புகின்றேன்.

அவர்பின்வந்த அவர் மைந்தன் திரு. ராஜீவ் காந்தி அவர்களுக்கு ஈழத்தமிழர்களினைப் பற்றியும் அவர்களுக்கு வேண்டிய தீர்வையும் ஆராயும் பூரண விளக்கமும் போதுமான அறிவும் இல்லாது போனதாகவே என்னால் ஊகிக்கமுடிகின்றது. அன்றைய இலங்கைத்தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் குள்ளத்தந்திரத்தினால் அவருடைய அறிவு மழிங்கடிக்கப்பட்டதோ தெரியவில்லை, ஏனெனில் அன்று அவர் நடந்துகொண்ட விதமும் செயற்பாடுகளும் சிங்களத்தலைமைக்குச் சார்பாகவே இருந்தது. அப்போது இலங்கை இந்திய ஒப்பந்தமென்றொரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டு, இலங்கைத்தலைவருடன் கைகோர்த்துக்கொண்டார் என்பதும் தாங்கள் அறிந்ததுதான். அதன்பிரகாரம் ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்தியேழாமாண்டு ஆவணி மாதத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படையென்ற போர்வையில் ஈழத்திற்கு அனுப்பட்டதும், அங்குவந்த இராணுவவீரர்கள் நடந்துகொண்ட விதமும், அமைதிகாக்க வந்தநோக்கத்திற்கு விரோதமான முறையில் எமக்கு எதிராக துப்பாக்கி முனைகளைத்திருப்பி குழந்தைகள், பெண்கள். வயோதிபர்கள், வைத்தியர்கள், அறிவுஜீவிகள் என ஐந்தாயிரத்திக்குமேற்பட்ட எம்முறவுகளின் உயிர்களை உறிஞ்க்குடித்ததும், பல ஆயிரம் பெண்களை பாலியல் வன்முறை மூலம் கற்பினைச்சூறையாடி நாசஞ்செய்ததும், அவர்கள் செய்த அராக்கியசெயல்களும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்,

ஏனெனில் அப்பொழுதும் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது. எது எவ்வாறாயினும் அன்றைய காலத்தில் நடந்த கசப்பான அந்நிகழ்வுகளின் உட்சூட்சுமங்கள்; உங்களுக்கு அதாவது காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களுக்குத்தான் வெளிச்சமாக இருக்கும். அதன்பின் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தினால் திரு. வி.பி.சிங் அவர்களும் பிரேமதாஸாவும் எடுத்த நடவடிக்கையினால் ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்தியொன்பதாமாண்டு; ஐப்பசி மாதத்தில் இந்திய இராணுவத் துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதும் வரலாறான ஒன்று. இதன்பின் ஆயிரத்து தொழாயிரத்து தொண்ணூற்றியொன்றில் நடந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலைப்பழியினை இந்தியஉளவுத்துறையினரும் இந்தியமுக்கியஸ்தர்ளும் இணைந்து தமிழீழ விடுதலைப்போராளிகளின் தலையில் கட்டிவிட்டனர். ஆனால் இதனை விசாரிப்பதெற்கென நிறுவப்பட்ட ஜெயின் ஆணையத்தின் ஆய்வறிக்கையின்படி சந்தேகிக்கத்தக்க விடயங்கள் பலவுண்டு. ஏனெனில் பிரதமர் ராஜீவ் காந்தி அவரகள் கொலைசெய்யப்பட்ட இடத்தில் பதின்நான்கு காவல்துறையினர் மட்டுமே பலியாகியுள்ளனர். ஆனால் இவ்விடத்தில் ஒரு கடைநிலை காங்கிரஸ் கட்சித்தொண்டன் கூட காயப்பட்டிருக்கவில்லை.

இவ்விடயத்தை இன்னும் ஆழமாகப் பார்க்கப்போனால் இவ்விடயத்தில் பல காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்ளும் சிக்குவார்களென நானினைக்கின்றேன். ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ராஜீவ் காந்திமேல் கோபமிருந்ததே தவிர வெறுப்பு இருந்ததில்லை. புலிகளுக்கு ராஜீவ் காந்தியைக் கொலைசெய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இதையெல்லாம் நான் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. இக்கொலை நடந்த பின் இந்தியா குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இலங்கை இனப்பிரச்சனையில் நேரடியாகத் தலையிடுவதில்லை என இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஆணித்தரமாகக் கூறிவிட்டனர். கூடவே தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ்மக்களிலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை ஒழித்து தனித்தமிழீழ கோரிக்கையை நிர்மூலமாக்கி இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வின் மூலம் ஒற்றையாட்சியின் கீழ் தீர்க்க இலங்கை அரசுக்கு மறைமுகமாக மிண்டுகொடுத்து வருகின்றது. இதற்காகவென இந்தியஉளவுத்துறையினரும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது என்பது தமிழ்மக்கள் யாவரும் அறிவார்கள், இதனைத் தாங்களுமறிவீர்கள். இதற்க்கு பல சான்றுகளும் நம்மிடமுண்டு, நாடறிந்ததும்கூட.

இலங்கையிலுள்ள இனப்பிரச்சனையைத் தீர்ப்பதில் இந்தியா இருபது வருடங்களுக்கு மேலாக இரட்டை வேடமாக இருந்து வருகின்றது. அதாவது இலங்கை இனப்பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுவதில்லை எனக்கொள்கை ரீதியாக தீர்மானித்துக் கொண்டு, மறைமுகமாக தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிராக இலங்கையரசுக்கு சாதகமாக உதவி வருகின்றீர்கள். இது தங்களினது ஆட்சிக்காலம் வரையும் தொடர்ந்து வருகின்றது.

“பாராளக் கர்ணன் பார்த்தனைக் கொன்று,
காரால் குழல்களைந்து, காலில் தளைபூட்டி,
நேராகக் கைப்பிடித்து நின்னையும் நான் கட்டுவேனானால்,
வாராமல் காக்கலாம் மாபாரதம்”

அதாவது, கொடைவள்ளல் கர்ணன் அரசாள, வீரன் அர்ச்சுனனைக் கொன்று, துரியோதனின் குருதியை தலையில் தேய்த்து நீராடும் வரை இக்கூந்தலை கூட்டி முடியமாட்டேன் என வீரசபதமிட்ட திரௌபதியின் கூந்தலை களைந்து, மாயவனே, கிருஸ்ணா! கால்கட்டுப்போட்டு உன்னையும் கட்டிவைத்தால் மகாபாரதப் போர் நடக்காமல் தடுக்கலாம் என்று பாண்டவர்களில் ஒருவரும், சோதிடனுமான சகாதேவன் தன் தீர்க்கதரிசனத்தில் ஸ்ரீகிருஸ்ணரைப் பார்த்து பாடுவான். அவ்வாறே இந்திய அரசின் கொள்ளை வகுப்பாளர்களின் நோக்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று, கூடவே பிரபாகரன் தலைமையில்லாத தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தனித்தமிழீழக் கோரிக்கையைக் கைவிட நிர்ப்பந்தித்து, முழுத்தமிழர்களுமே சிங்களத்திடம் மண்டியிட்டு, கைகட்டி, வாய்பொத்தி நிற்க, தங்களுடைய (இந்தியாவின்) விருப்பத்திற்கமைய திணிக்கப்படும் அதிகாரப்பரவலாக்கல் என்ற பொரியினை தங்கள் ஆசீர்வாதத்துடன் இலங்கையரசு வழங்க ஈழத்தமிழர்களாகிய நாம் இருகரம் கூப்பியேற்கவேண்டும் என்பதாகும்.

ஆனால் மேற்கூறிய இந்த இரண்டும் ஒருபோதுமே நடக்காது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஏனெனில், பாண்டவர்கள் கௌரவர்களிடத்தில், அகிம்சை முறையில் ஐந்து இராச்சியங்கள் கேட்டு, ஐந்து ஊர்கள் கேட்டு, ஐந்து வீடுகள் கேட்டு அவை கூடக்கிடைக்காது போனதால் தான் மகாபாரதப் போர் மூண்டது. அவ்வாறே ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தியாறு முதல் அன்றைய தமிழ்த்தலைவர்களால் ஆகிம்சை ரீதியான போராட்டங்கள் பல நடத்திப் பலன்கிடைக்காமல் பெரும்பான்மைச் சிங்களவரால் சிறுபான்மையினராகிய நாம் சிதைக்கப்பட்டோம், சிறைப்படுத்தப்பட்டோம்; அதன் பிரதிபலிப்புத்தான் தனித்தமிழீழத்துக்கான தமிழ்மக்களின் அங்கீகாரமும், அதற்கான ஆயுதந்தாங்கிய விடுதலைப் பேராட்டம் என்பதைத் தாங்கள் சிறிதேனும் சிந்தித்தறியாத ஒன்றா? தமிழீழம் தான் இதற்க்கான தீர்வென்பதை இன்னும் ஏன் மறுக்கிறீர்கள்? ஏதோ நேற்றிரவுத் தூக்கத்தில் தலைவர் பிரபாகரன் கனவுகண்டு, இன்றுகாலை எழுந்து தமிழீழம் தானென முடிவெடுத்ததாக தாங்களும், தங்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்ளும், இந்திய உளவுத்துறையினரும் எண்ணுகிறீர்கள்.

தயவுகூர்ந்து எங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனோ இன்று வரை நீங்கள் எங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறீர்கள்? தனித்தமிழீழம் தான் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசை என்பதற்க்கு ஆயிரத்து தொழாயிரத்து எழுபத்தியாறு வைகாசி மாதம் தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும், ஆயிரத்து தொழாயிரத்து எழுபத்தியேழுப் பொதுத் தேர்தலில் அத்தீர்மானத்திற்க்கு தமிழ்மக்கள் அளித்த வாக்குகளும் சான்றாகும்.

“இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினர்
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார்”

என்றுரைத்தான் கம்பன், இரக்கம் இல்லாத இதயத்தை உடையவர்கள், அறத்தினை விட்டு விலகிய அரக்கர்களாவர்கள். அவ்வாறான அரக்க குணமுடையதுதான் சிங்களப் பேரினவாதம், ஜனநாயகமற்ற அப்பேரினவாத அரசிற்கு அனுசரணையாக தங்களுடைய அரசும் சில மேற்குலக ஐரோப்பிய நாடுகளும் உதவி, அவ்வரசுக்கு உந்துசக்தியளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்க்கு நீங்கள் பூசும் முலாமும், கூறிக்கொள்ளும் விளக்கவுரையும்; இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும் தீவிரவாதத்திற்கெதிரான, பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், ஆகவே இவ்யுத்தத்தினை முன்னெடுக்க வேண்டும், இதில் இலங்கை வெற்றி காணவேண்டும். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களையிழந்து, பலகோடிக்கணக்கில் எம்சொத்துக்களையிழந்து இன்று வரை இலங்கையின் இறையாண்மையை நாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை கொலைகள், எத்தனை கொடூரங்கள், எத்தனை பாலியல் வன்முறைகள், எத்தனை இழப்புக்கள், எத்தனை ஊனங்கள், எத்தனை வடுக்கள் அத்தனையையும் எம்மால் மறக்கமுடியுமா?

தற்பொழுது இடம்பெயர்ந்து வவுனியாவிலிருக்கும் எம்முறவுகள் என்ன குற்றம் செய்தார்கள்? தமிழராய்ப் பிறந்ததைவிட வேறென்ன? அவர்களை விசாரணையென்றும், விளக்கமென்றும் படையினராலும், புலனாய்வுப்பிரிவினராலும் நாள்தோறும் துன்புறுத்துவதும்  தாயிற்க்கு முன்னால் மகளும், கணவனுக்கு முன்னால் மனைவியையும், சகோதரங்களுக்கு முன்னால் சகோதரிகளையும், பாலியற்பலாத்காரஞ் செய்வதும், அவைகளையெல்லாம் தமது கைத்தொலைபேசியில் படம்பிடித்து தத்தமது நண்பர்களுக்கு அனுப்புவதும் இலங்கையின் இறையாண்மை தானோ? இத்தகைய இலங்கையின் இறையாண்மையை இந்திய அரசும் ஏற்றுக்கொள்கிறதா? அதற்க்கு இன்னுமும் இந்திய அரசும் உதவப்போகிறதா? இதுதான் தீவிரவாதத்திற்கு எதிரானதும், பயங்கரவாதத்திற்கு எதிரானதுமான யுத்த முன்னெடுப்பா? இதுதான் ஜனநாயக நாட்டின் அரசாங்கத்தின் இலட்சணமா? ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கும், உலக இராணுவத்தின் சட்டதிட்டங்களை மதிக்கும் மாட்சிமை இதுதானா? உண்மையைச் சொல்லுகின்றேன், இலங்கையின் இறையாண்மையைப் பற்றி இன்றுவரை எனக்கு வகையான வரைவிலக்கணத்தினை வரையறுக்கவோ, இல்லை விளங்கிக்கொள்ளவோ முடியவில்லை; தயவுகூர்ந்து இலங்கையின் இறையாண்மையைப் பற்றிப் பகிரங்கமாகப் பேசுங்கள். என்னைப்போன்றோரும், இதைப்பற்றி தெரியாத ஏனையோரும் அறியக்கூடியதாக இருக்கும்.

பொற்கோவில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையினை சீக்கிய மக்கள்,; எப்போதும் மறக்கவும் மாட்டார்கள், ஒருபோதும் மன்னிக்கவும் மாட்டர்கள் என்கிறீர்கள். அந்த இராணுவ நடவடிக்கையினால் உணர்ச்சிவசப்பட்ட சீக்கியர் ஒருவரால் அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டதும், அதன்பிரதிபலிப்பால் தங்களினின மக்களைப் பழிவாங்கும் எண்ணததில் மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட சீக்கியர்களின் உயிர்களைப் பலியெடுத்து, இந்திராகாந்தி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தினர். அதனாலேற்பட்ட ரணத்தினையும்; அந்த உயிரிழப்புக்களின் வலியையும் தாங்கள் உணராததல்ல, தங்களினத்தின் உயிர்களை பறித்தபோது தங்களுக்கில்லாத இனப்பற்றா? ஆனால் அச்சம்பவம் அதிஷ்டவசமாக மூவாயிரம் உயிர்களுடன் முற்றுப்பெற்றது, ஆனால் யாரோயொருவர் செய்த குற்றத்திற்கு, யாரோயொருவரின் தலையில் அப்பழியினைச்சுமத்தி, அதற்க்காக மொத்தமாக அந்த இனத்தினை அழிக்கும் செயற்பாடு நீதியானதா? இதுதான் இந்திய ஜனநாயக தேசத்தின் மாட்சிமையா? தங்கள் தலைமையிலான ஆட்சியின் மாட்சிமையா? சிங்களப் பேரினவாதிகளின் கொள்கையினையும், தமிழின அழிப்பினையும் தாங்களும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தோள்கொடுத்து இன்னும் உதவுவீர்களா?

அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்து தொப்பூள்கொடி உறவுகள் இந்திய இறையாண்மைக்குட்பட்டு நீதியான, நேர்மையான வழிகளில் எத்தனையோ வகையான எத்தனையோ போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர், ஆனால் தங்கள் தலைமையிலான இந்திய நடுவணரசு எதனையும் கண்டுகொள்வதாகவோ, அப்போராட்டங்களுக்கும் வேண்டுகைகளுக்கும் செவிசாய்ப்பதாக இல்லையென்பதுதான் வெளிப்படை உண்மை. எங்களின் சுயநிர்ணயத்திற்காக, இன்றுவரை ஏன் நீங்கள் எந்தப்போராட்டத்தினையும் ஏறெடுத்துப்பார்க்காமல், பாராமுகமாக இருக்கிறீர்கள் என்பதை இன்னுமும் விளங்கிக் கொள்ளமுடியவல்லை? தமிழ்த்தேசியத்திற்காக போராடும் எம்மவரை நீங்கள் மதிக்கத் தவறிவிட்டீர்கள். இன்றுவரை எட்டுக்கும் மேற்பட்ட தமிழகத்து உறவுகள் தீக்குளித்து, தங்களின் உயிர்த்தியாகத்தின் மூலம் தங்களின் உணர்வுகளைப் புரட்டிக்காட்டியபின்னும் தங்களின் மௌனத்தைக் கலைத்து, ஒரு வார்த்தையேனும் பேசாமல் ஊமையாக இருப்பதன் சூட்சமம் என்ன என்பதை எடுத்துரைப்பீர்களா? காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராஜீவ் காந்தியின் துணைவியார் திருமதி சோனியா காந்தி அவர்கள் ஒருபுறம் நளினியைச் சந்தித்தும், மறுபுறம் சிங்களத்துடன் கைகோர்த்தும் இரட்டை வேடம் போட்டு, எம்மினத்தினைப் பழிவாங்கும் படலத்திற்க்கு தாங்கள் பச்சைக் கொடிகாட்டி வரவேற்கிறீர்களா?

சரி நீங்கள் எந்தத்தரப்பினதும் எந்தப் போராட்டத்தினையும், எவரின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கவில்லையெனின் அதற்கான காரணத்தையேனும் பகிரங்கமாக பொதுமக்களுக்கு, உங்களை அரியணையின் ஏற்றி அழகுபார்க்கும் அடித்தட்டு மக்களுக்கு அறியப்படுத்துங்கள். தங்களின் தலைமையின் கீழுள்ள அமைச்சர்களும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களும் தலைவர்களும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவர் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தெரிவிக்கின்றனர். வெளியுறவு அமைச்சரும் அவரின் செயலரும் இலங்கைச் சிங்கள இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கிக் கௌரவித்ததுடன், கூடவே இருபத்திமூன்று வருடப்பிரச்சனையை போர் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் தீர்ப்புக்கூறி திருப்திப்படுகின்றனர். உள்துறையமைச்சர் திரு பா. சிதம்பரமோ இலங்கையில் போர்முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமானால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக்களைந்து நிராயுதபாணிகளாக சிங்களத்திடம் மண்டியிட வேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்.

இற்றைக்கு இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசினை நம்பி, இந்திய அரசின் கருத்தினை மதித்து ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்தியேழாமாண்டு ஆவணி மாதம் ஐந்தாம் திகதி இந்திய இராணுவத்தின் முன்னிலையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் களைந்ததும், அதன்பின் நாம்சந்தித்த சம்பவங்களையும்  முகங்கொடுத்த இழப்புக்களையும் முன்னர் நான் உரைத்து உணர்ந்திருப்பீர்கள். காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வீரப்பமுகலியோ ஒருபடி மேலேறி காங்கிரஸ் கட்சி போரினை ஆதரிக்கின்றது என்றும், கூடவே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வெகுவிரைவில் கைதுசெய்து இந்தியாவிற்க்கு அனுப்பி வைக்கவேண்டும் என இலங்கை அரசினைக் கோருகிறார். இன்னும்சிலர் இலங்கை அரசின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியஅரசு தேவைக்கதிகமாய் தலையிடமாட்டாது என்றும் இலங்கையரசின் இறைமையைக் காக்கவும், சீனா, பாகிஸ்தான் ஆகிய இந்திய பகைசக்திகள் இலங்கையில் காலூன்றாமலிருக்கவும் இந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்குமெனவும், இது தொடருமெனவும் வகைவகையாய் வியாக்கியானம் கற்பிக்கின்றனர்.

தலைமைக்குக் கீழ்படிவுள்ள தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களே இந்தியஅரசு ஈழத்தமிழர்களைக் காக்கும், அவர்களுக்கு சிங்களவர்களைப்போல் சம அந்தஸ்து வழங்க ஆயிரத்து தொழாயிரத்து எண்பத்தியேழாமாண்டு கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி, இலங்கையின் அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தின்; அடிப்படையில் அதிகாரப்பகிர்வு நடைமுறைப்படுத்த இந்தியஅரசு இலங்கையரசை வலியுறுத்தும் அதேவேளை பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமெனவும், பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தினை நாம் ஒருபோதும் நிறுத்த உதவமாட்டோம் எனவும் தடுக்கி விழுகிறார்கள். ஈழத்தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றக்கோரியும், ஈழப்பிரச்சினையில் இந்தியஅரசு தலையிட்டு நீதிவழங்க கேட்டுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்திய, தமிழகத்து தமிழர்களைப் பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தினை ஆதரிக்கும் பாசிசவாதிகள் என பழிபோடுகிறாரகள் தமிழகத்து காங்கிரஸ் மறத்தமிழர்கள்.

ஆனாலும் இப்படிப்பட்ட சூழலில் அண்மையில் தமிழகத்து காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் கணிசமான தொண்டர்களும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து விலகி தாம் பச்சைத்தமிழன், படுதுரோகம் செய்ய பக்கபலமாக இருக்கமாட்டோம் என பறைசாற்றி பதவிகளைத் துறந்த செய்திகளும் தங்களுக்கு பறந்து வந்திருக்கும். ஆக இப்போது தாங்களுட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இன்னுமொரு தலைவலி. அதாவது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கட்சியிலிருந்து விலகாமலிருக்கவேனும் இனித்தாங்கள் துரிமாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென நானினைக்கின்றேன். ஏனெனில் இந்நிலைமை தொடருமாயின் தமிழகத்தில் தேசியகட்சியான காங்கிரஸ் கட்சி தேய்ந்து கட்டெறும்பாகி விடுமென்பது உலகவங்கியில் உயர்பதவி வகித்த தாங்கள் உய்த்தறியாததா?

இரண்டாயிரத்தி இரண்டாமாண்டு; சர்வதேசத்தின் அனுசரணையோடும் நோர்வே அரசின நடுநிலையோடும் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தாங்கள் அறிந்தது, அது இந்தியாவின் மௌனச்சம்மதத்துடன் தான் நடந்தது. ஆறுசுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றும், ஆனது என்ன? உருப்படியான எந்த ஒரு தீர்வையும் வழங்க நினைக்காத சிங்களம், காரணங்களேதும் அன்றி பேச்சுக்களை இழுத்தடித்ததே தவிர, குறைந்த அதிகாரம் எதையும் எமக்களிக் எத்தனிக்கவில்லை. அன்றைய இலங்கைப் பிரதமருக்கும், அரசதலைவருக்கும் இடையிலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும், அதிகாரம் ஏதுமற்ற பிரதமரின் கையாலாகாத தன்மையினாலும் காலங் கடந்தது. அதன் பின் வந்த அதிஉத்தம அதிபர் அன்றிலிருந்து இன்றுவரை ஆற்றுகின்ற அரசியல் சேவையோ அகிலமே அறிந்தது. திரு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசைக் கவிழ்த்து அனைத்து அதிகாரத்துடன் அரியணையேறிய அதிஉத்தம அதிபர் இரண்டாயிரத்தி ஆறாமாண்டு சர்வதேச ரீதியில், சர்வதேச சட்டதிட்டங்களுக்குட்பட்டு கைச்சத்தாகிய ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகி, யுத்தத்தின மூலம் பயங்கரவாதத்தினை ஒழித்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என முடிவெடுத்துக்கொண்டார். அதற்க்கு தங்களரசின் ஆசியுடனும், தரணியெங்கும் தருவிக்கப்பட்ட கருவிகளாலும் அன்றிலிருந்து இன்றுவரை எம்மினத்தின் கருவறுக்கும் கைங்கரியங்களை இக்கடிதத்தில் எழுதி முடிக்க முடியாது.

சிங்கள அரசினால் நம்மீது திணிக்கப்பட்ட யுத்தத்திற்க்கு முகங்கொடுத்த நாம், சுமந்த சுமைகள், ரணங்கள், வடுக்கள், சொத்தழிவுகள் கொஞ்சமல்ல. காலங்காலமாக நாம் பட்ட துன்பங்களைத் துடைக்க எந்த நாடும் எமை நெருங்கிவந்து, நேசக்கரம் நீட்டி, எம் கண்ணீரைத் துடைக்கவில்லை. எட்டிப்பார்க்கும் தூரத்திலிருக்கும் இந்தியப் பேரரசும் எம்துயர்தனைக் களையத் தவறியது ஏனோ தெரியவில்லை? இவையெல்லாவற்றையும் கடந்து, சாவிலும் எழுவோமெனச் சபதமிட்டு, புலம்பெயர்ந்து சென்று தாம் வாழுமிடங்களிலிருந்துகொண்டே இவ்விடுதலைப் போருக்கு இன்றும் எல்லா வகைகளிலும் கைகொடுத்தவர்கள் புலம்பெயர்ந்த தேசத்தில் வாழுகின்ற எம்முறவுகளே. பரந்த இப்பூமிப்பந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழதமிழர்கள் உலகச்சொந்தங்களுடன் இணைந்து, தாம் வாழும் நாடுகளில் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு, கவனயீர்ப்புப் போராட்டங்களையும், அகிம்சைரீதியான அறப்போராட்டங்களை நடத்தி உலக நாடுகளின் கவனத்தினைத் தம்பக்கம் ஈர்த்து, எமது உரிமைப் போராட்டத்தினை உலகறியவைத்து சர்வதேச மயப்படுத்தினர்.

சமூக ஆர்வமுள்ள, முற்போக்குச் சிந்தனையுள்ள சிலர் எம்துயர்தனைப் புரிந்தும், இலங்கை அரசின் நிலையினை உணர்ந்தும், பாதிக்கப்பட்ட எமைநோக்கி நீட்டி நேசக்கரத்தினையும், சில நாசகாரசக்திகள் தலையிட்டு, நாம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நாட்டினைப்பிரித்தாள முனையும் பிரிவினைவாதிகள் எனப் பிரச்சாரப்படுத்தி தட்டிக்கழித்தனர். எமைச் சூழ்ந்துகொண்ட சதிவலைப்பின்னல்கள், நம்பிக்கைத் துரோககஙகள் எல்லாவற்றையும் தாண்டி, வெற்றி கொண்டு சர்வதேச பார்வையினை எமைநோக்கித் திருப்பி, இலங்கை அரசிற்க்கு அழுத்தங் கொடுக்க முனையும் சில ஜனநாயக வாதிகளையும், தங்கள் நாட்டின் நாயகர்கள் சிலர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அத்தோடு தெற்காசியாவில் வளர்ந்துவரும் வல்லரசாகிய இந்தியப் பேரரசு, சில ஐரோப்பிய நாடுகளினை நாடி இலங்கை விடயத்தினைப் பற்றி தவறாக பிரச்சாரப்படுத்தி வருகின்றது. மனித உரிமைகளைப் பறைசாற்றும் அமைப்புக்களும், அனைத்து நாடுகளினதும் நீதி சாந்தி, சமாதானமே தாரக மந்திரமாய் உச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையும் இன்னமும் எமைப் பார்க்காததும், எமெக்கெல்லாம் கவலையளிக்கிறது. எது எவ்வாறாயினும் சர்வதேசத்தின் கண்கள் இன்னமும் எமைக் கண்கொண்டு பார்க்காதது பாரில் பரந்து வாழும் தமிழினத்திற்குத் தாங்கமுடியாத துயரே.

சரி ஈழப்பிரச்சினையிலும், எங்களின் உரிமைப் போராட்டத்திலும் இந்தியஅரசின் தலையீட்டினை ஒருபுறம் வைத்துவிடுவோம், ஏனெனில் தங்களுட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களின் எண்ணப்படி நாம் வேறுநாட்டவர் எனறு வைத்துக் கொள்வோமே. இராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய தென்கரையோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் இந்தியர்கள் தானே, அவர்களும் இந்தியக் குடியுரிமையுள்ளவர்கள் தானே, அந்த அப்பாவிகளின் அவலங்களையும், அவர்களின் இன்னல்களையும் ஏன் இன்றுவரை தங்களின் திருவாயைத் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசாதிருக்கிறீர்கள்; இன்றுவரை தொழாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். தமிழின மீனவர்களை நடுக்கடலில் தடுத்து, உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தாக்கப்படுவதைத் தர்க்கமின்றித் தாங்கள் ஏற்றருள்கிறீர்களா? அல்லது இதனையும் இல்லையென எதிர்த்தியம்புவீரா?

“ஒரு நாள் போவோம் ஒரு நாள் வருவோம், ஒவ்வொரு நாளும் துயரம்.…”

முன்னைநாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் வாயசைக்க படகோட்டி என்ற சினிமாப்படத்திற்க்காக வாலிபக்கவிஞன் வாலி எழுதிய பாடலிது. தூரத்திலிருக்கும் நிலவின் துணையோடு துடுப்பெடுத்துப்போகும் மீனவர்கள் கடலில் சந்திக்கும் இயற்கையின் கோளாறை எடுத்தியம்பவே எழுதிய பாடல். ஆனால் இது இன்றைய நிலையில் தமிழகத்தமிழனின் அன்றாட நிலைமை என்பதை எவராலும் மறுக்கமுடியாத உண்மையின் உண்மை. தினந்தோறும் திரைகடலேறிச் செல்லும் தமிழினம் ஏற்கும் துன்பங்கள் எத்தனை? இதுபற்றி எண்ணற்ற தடவைகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு, மனுக்கொடுத்து, நீதி கேட்டதற்கும் போராட்டங்கள் நடத்திப் புரியவைத்ததற்குத் தீர்வாய், தங்களின் தலைமையிலான அமைச்சரவையுடன் கலந்தாலோசித்தபின் தங்களின் ஆட்சியின் கூட்டுப்பங்பாளியும், மூதறிஞர் தமிழகத்தின் முதல்வர்; கலைஞர் ஆலோசனையாயும், கண்ணியமாயும் கட்டளையிட்டார், மீனவர்களெல்லோருக்கும் நடுவணரசால் அடையாள அட்டை வழங்கப்படுமெனவும், அதைக்கடல் செல்லும் மீனவர்களெல்லாம் எடுத்துச்சென்று, எந்தப்படையினராவது அண்மிக்கும்போதோ இல்லை நெருங்கிச்சோதனை செய்யும்; போதோ காண்பிக்கப்படவேண்டுமெனவும். இவ்வாறு மீனவர்கள் அடையாள அட்டையைககாண்பித்து இந்தியர்களென உறுதிப்படுத்தினால், எவராலும் எத்துயராலும் ஏற்படாது என்பது அவரெண்ணம்.

ஆனால் எப்படைகளாவது அண்மித்தோ, அன்றி நெருங்கிவந்து சோதனைசெய்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்று சுடுகணைகளால் துளாவும் போது இவ்வடையாள அட்டைகளை எவ்வாறு எவரிடம் காண்பிப்பார்கள், இல்லை சுடுகணைகளிலிருந்து வரும் தணல்களுக்கு கண்களுண்டா? இவ்வடையாள அட்டைகளைக் காண்பதற்க்கு. இப்பிரச்சினைக்கு இதனைவிட வேறு தீர்வில்லையா? தெற்காசியாவிலுள்ள இந்து சமுத்திரமே இந்தியாவின் எண்ணப்படிதான் அலையடிக்க வேண்டுமென விரும்பி வகுக்கப்பட்ட கொள்கைகளில் இதற்கிடமில்லையா? உலகத்தின் எப்பாகத்திலும், எந்நாட்டிலும் மூக்கைநுளைத்து முண்டியடிக்கும் இந்திய உளவுத் துறையினரிடமும் இக்கடல் ஏழைகளின் துயர்துடைக்க எவ்வழியுமில்லையா? இலங்கைச் சிங்கள அரசின் இறைமையைக் காக்கவென, அவ்வரசின் எண்ணப்படி நடந்துகொண்டு, அவர்களுக்கு மிண்டுகொடுக்கும் தங்களின் அரசுக்கு சிங்களம் வழங்கும் பிரதியுபகாரம் தானாயிது?

ஒரு நாட்டின் இறைமை என்பது என் அறிவுக்கு எட்டியவரையில், தனது ஆட்சியின் கீழுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் வாழுமுரிமையும் அதற்க்கான முழுப்பாதுகாப்பும் வழங்கவேண்டும். ஆக தாங்கள் தலைமையான இந்திய நடுவணரசு தன் இறைமையை இழந்து, சிங்கள அரசின் இறைமையைக்காத்துக் கொள்கிறதா என என்னைப்போன்ற எல்லோரும் எண்ணத்தோண்றுகின்றது. அத்தோடு, தமிழ்நாட்டுத் தமிழனுக்கு ஏற்படும் இத்துன்பம், மற்றைய மாநிலத்தில் உள்ள கேரளமாநிலத்து மலையாளிக்கோ, கன்னடமாநிலத்து கன்னடருக்கோ, ஆந்திர மாநிலத்து தெலுங்கருக்கோ இந்நிலை உண்டானால் தங்களின் நிலை அப்போதும் மௌனமாகத்தான் இருக்குமா? இல்லை இது தமிழகத்து தமிழனுக்கு மட்டும் தானா என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் இந்தியாவின் பகையான நாடென நம்பும், பாகிஸ்தான் மீனவர்கள் எல்லைமீறி இந்திய எல்லைக்குள் பிரவேசித்தாலோ, இல்லை இந்திய மீனவர்கள் திசைமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றாலோ எத்தரப்பினரும் அம்மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதோ, இல்லை அவர்களை துன்புறுத்திக் கொள்வதுமில்லை என்பது எல்லோருமறிந்தது தான். இது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டி ஒன்றென நானினைக்கின்றேன்.

“ஜேர்மனியின் கரப்பான்கள்” என யூதர்களை வர்ணித்து, அவ்வினத்தினை அழித்து தன் ஆட்சிக்காலத்தில் மாபெரும் இனப்படுகொலை செய்த சர்வாதிகாரி கிட்லருக்கு ஒத்தாசையாகவும் பக்ககலமாகவும் இருந்தவர், இத்தாலி நாட்டைச்சேர்ந்த முசோலின். அஃதே “தற்கால துட்டகைமுனு” எனச்சிங்கள பேரினவாத மக்களால் போற்றப்படும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நிகழ்காலத்தில் அதே இத்தாலி நாட்டைச்சேர்ந்தவரும், தாங்கள் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திருமதி சோனியா காந்தி அம்மையார் உறுதுணையாகவும், உற்ற தோழியாகவும் நின்று, ஈழத்தமிழினினத்தை அழிக்க அனுசரணையாக இருந்துகொண்டிக்கிறார் என்பதை உலகத்தமிழர் ஒவ்வொருவரும் ஒழிவுமறைவின்றி ஒப்புக்கொள்கின்றனர். இதுவே வெளிப்படை உண்மையும் கூட. தன் தனிப்பட்ட கருத்தினையும், தானாகத் தீர்மானமானித்த, பழிதீர்க்கும் படலத்தினை நிறைவேற்ற இந்திய தேசிய அரசினையும், அவ்வரசின் வெளியுறவுக் கொள்கைகளையும் பிரயோகித்து தான் நினைத்ததைத் நிறைவேற்றிக்கொள்கிறார்.

இந்நிலைமை தொடருமாயின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி புறந்தள்ளப்படும் என்பது என்கணிப்பு, பாரறிந்த பகுத்தாய்வாளர்களின் பார்வையும் கூட. ஆக பண்டைய இந்தியாவின் பாரம்பரிய மதிப்பினையும், வரலாற்றுப் பெருமையினையும் காப்பதானால் தங்களைப்போல தலைசிறந்த இந்தியத் தலைவர்களால் மட்டுமே முடியுமெனபது என் ஆணித்தரமான வேண்டுகை. இன்னும் விபரமாகச் சொல்வதாயின் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையினை விரைவில் மாற்றுவதன் மூலமே விரோதமற்ற, தூரநோக்கமான நல்லாட்சியினை நாட்டில் நிலைநாட்ட முடியும். கூடவே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்தினால் வளர்ந்து வரும் வல்லரசை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்பதை உலகறிந்த உத்தமர் தங்களுக்கு நானுரைப்பது முறையல்ல.

யாரிட்ட சாபமோ, நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தொடர் நிறைவுறும் தருணத்திலும் தாங்கள் அங்கு பிரசன்னமாக முடியவில்லை. வருகை தந்திருந்தால் இலங்கையில் வளரும் வன்முறைக்கு ஒரு வருத்தமாவது தெரிவித்திருப்பீர் என நம்புகின்றேன். எனினும் அமைச்சரவையின் அமர்விலாவது அல்லல்பட்டு அலையும் தமிழினத்திற்க்கு ஆற்றவேண்டிய ஆக்கபூர்வமான முயற்சியினைத் தங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்தி ஆவன செய்வீர்களாக. அத்தோடு நாம் அடையப்போகும் சுதந்திர நாடான தமிழீழத்தினையும், அதனைப் பெற்றுக்கொள்ளப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அங்கிகரித்து புனித வரலாற்றுப் புத்தகத்தில் தங்கள் பெருமைமிக்க பெயரினையும் பதிவு செய்யுங்கள். இப்புனித பிரகடனத்தினை தாங்கள் பிறப்பிப்பீர்களாயின், உலகத்தமிழினமும், உருவாகும் தமிழீழமும் உயிருள்ளவரை, இவ்வுலகமுள்ளவரை உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசிற்கும் நன்றிக்கடனும் விசுவாசமானவர்களாகவும் இருப்போம் என்பதை உறுதியளிக்கின்றேன்.

காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள குடிமக்களைக் கட்டியாளும் கனவானே உம் கண் திறந்து, எம்துயர் துடைத்து, உலகத்து மாந்தரைப்போல் நாமும் வாழ வகை செய்வீராக. தங்களின் இவ்வரிய நடவடிக்கைகள் ஏதிலிகளாக்கப்பட்ட எம்மினத்தின் விடிவிற்க்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் காங்கிரஸ் கட்சி ஈட்டும் வெற்றிக்கும் வழிவகுக்கும் என்பது என் கருத்து.

“விளலுக்கு இறைப்பதைப்போல்” விடுதலைப் புலிகளை அழிப்போம் என்ற வீணான, முடியாத முயற்சியை முயலாதீர்கள் என தங்களின் அரசிற்கு வழிகாட்டும், ஆலோசகர் திருமதி சோனியா காந்தி அம்மையாருக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் இயன்றவரை எடுத்தியம்புவீராக...

புதிய கீதை…

~~எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கின்றது,
எது நடக்கவிருக்கிறதோ, அதும் நன்றாகவே நடக்கும்.
எதை நீ அனுப்பிவைத்தாய், அதை நீ அழிப்பதற்க்கு!
எதை நீ வன்னிக்கு கொண்டு சென்றாய்;, அதை நீ இழப்பதற்கு!
இன்று இராணுவத்தினுடையது, நாளை விடுதலைப் புலிகளினுடையது!
இதுவே மகிந்தவினதும் மன்மோகனினதும் ஆட்சின் மாட்சியும் மந்தபுத்தியும்.||


நன்றி வணக்கம்,
மீண்டுமொரு மடலில் சந்திப்போம்.

என்றும் தாயகக்கனவுடன்,
கவே. கரிகாலன்.
01-03-2009

 

HomePage 

Copyright (c) 2008- 2009 NewTamilWorld . All rights reserved.