என்னினமே என்சனமே எங்கள் குரல் கேட்கிறதா? வன்னி மண்ணிலிருந்து எழுதும் கடிதம் இது....
நாமே தயாரித்த குப்பி விளக்கொளியில்………கையில் கிடைத்த காகிதத்தில்…… இந்த அஞ்சலை அஞ்சாமல் யான் வடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எமக்காக எமது மண்ணிற்காக இக்கணம் வரை வீரச்சாவடைந்த மானமாவீரரை நினைந்து, அந்நியனது அழிப்பில் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களை எண்ணியவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் வரைந்தனுப்ப முயல்கிறேன்.
கடந்த ஆண்டு இறுதிவரை நாங்கள் வாழ்ந்த வர்த்தக - நிர்வாக நகரினை விட்டேகி அங்குல அங்குலமாய் நகர்ந்து நாமிங்கு வந்து நான்கு வாரங்களாகிய நிலையில் எதிர்வரும் நாட்கள் பெரும் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் நகர்கின்றன.
வள்ளுவப் பெருந்தகையின் முந்நூற்று ஐம்பத்து நான்கு குறள்களுக்கு முந்நூறு ‘குறளோவியம்’ தீட்டிய கலைஞர் ஆட்சியில், உங்களில் சிலர் இந்நேரத்துக் கனவுலகில் சஞ்சரிக்க, எங்களின் கதியை எண்ணி உறங்க முடியாது பலர் தவித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் என்பதை அண்மைக் கால உங்களது எழுச்சி மிகு செயற்பாடுகளில் இருந்து உணர்ந்தறிந்தபடி, இங்குள்ள நாங்களோ, ஒப்பற்ற தேசியத் தலைவர் வழி நடந்து, வளமான நம் மண்ணை - தமிழீழ தேசத்தை ஆக்கிரமித்து அழித்தொழிக்க முயன்று குரல் வளையை நெரிப்பதாக நெருங்கி வந்து கொண்டிருக்கிற சிங்களப் பேரினவாத அரசின் படைகளுடன் அறுதியாகப் போரிட்டு, இறுதியாக ‘வெற்றிக் கனி’ பறித்திடுவதற்கான தயாரிப்பில் சலிப்பில்லாது ஈடுபட்டு இயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
வந்தாரை எல்லாம் வரவேற்று நலமே வாழ வைத்த வன்னி மண்ணின் மைந்தர்கள் காலமிட்ட கட்டளை ஏற்று வரலாற்று வரிகளில் முழுமையாய் இணைந்துள்ள இந்நேரத்தில் - உயிர் கொடுத்துத் தம் ‘உதிரத்தால் ஓர் உயிரோவியம்’ வரைந்து கொண்டிருக்கும் இந்தக் கணங்களில்……..கிடைத்த பொழுதில் கண்ணயராது உங்களுக்குக் கடிதம் நானெழுதக் காரணம் ஆயிரம்.
ஆனாலும் அதையெல்லாம் எழுத விடாது வந்து வீழும் பகைவனின் எறிகணைகளுக்கிடையேயும் எரிகுண்டுகள் மற்றும் கொத்தணிக் குண்டுகளிடையேயும் ஒரு சில காரணங்களையாவது சுட்டிக்காட்டிடலாமென்று எண்ணி நம்பித் தொடர்கிறேன். ஒரு வேளை, இதுவே நாம் உங்களுக்கு எழுதும் இறுதி மடலாகவும் கடைசி வேண்டுகோளாகவும் இருக்கவும் கூடும்.
பாசத்துக்குரியவர்களே! உலைக் கூடத்திலே கொட்டப்பட்ட புழுக்களின் கூட்டமல்ல நம் மக்கள். பகை சூழும் போர்க் களத்திலே கழுத்தில் நஞ்சு மாலை அணிந்து “…….இருப்பது ஓர் உயிர் தானே! அது போகப் போவதும் ஒரு முறை தானே…………” என்று கூறி, அநியாயம் செய்து நெருங்கி வரும் பகைவனின் படைகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி - நம் மக்கள்………அணியணியாக…….
“அநியாயத்தை
எதிர்த்து நில்லுங்கள்!
வாருங்கள் அடிபடும்
உங்களுக்கு நான் தலைமை
வகிக்கிறேன்…” எனக் கூறி
நம்மெல்லோரையும் காத்துச்
செல்லும் நம் தானைத்
தலைவர் தலைமையில், அவர்
சுட்டும் திசையில்
எங்கும் செல்வோம் -
எதிலும் வெல்வோம்
என்றவாறு திரள் திரளாக -
நம் சகோதரர்கள்……
இந்நிலையில், ஆறாண்டுகள்
முன் கைச்சாத்தாகிய
‘யுத்த நிறுத்த
உடன்படிக்கை’யையும்
ஏறத்தாழ
இரண்டாயிரத்துக்குச்
சற்று மேற்பட்ட இன்று
வரையான நாட்களுக்குள் நம்
தாயகத்தில்
நிகழ்ந்தவற்றையும் ஒரு
கணம் சிந்தித்துப்
பாருங்கள்.
அவ்வொப்பந்தத்தில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டு எம்மையும் சமதரப்பாக ஏற்றுக் கொண்ட சிங்கள அரச தரப்பு, எம்மை ஏமாற்றிப் பலவீனப்படுத்தி விட்டதாகக் கூறி எக்காளமிடுகிறது தற்போது. இது பற்றிப் பாராமுகமாய் - கண்டும் காணாதவார்களாய் இருக்கிறார்கள் அப்போது சாட்சியாய் இருந்தவர்கள் என்பது, கசப்பானதொரு உண்மையல்லவா?
அன்பானவர்களே! கடந்த அறுபது ஆண்டுகளில் நம் தேசம் காணாத பேச்சுவார்த்தையுமில்லை, ஒப்பந்தமுமில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இதற்கு முன், தங்கள் நாட்டரசும் எமது ‘அயல் நாட்டுக் குள்ளநரியும்’, எமது ஏக பிரதிநிதிகளை நிர்ப்பந்தித்து, தான்தோன்றித்தனமாகச் செய்த “இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும்” நீங்களோ நாங்களோ மறப்பதற்கில்லை.
அதேபோல், அந்த உடன்படிக்கை கிழிந்த - கிழித்தெறியப்பட்ட ஒக்டோபர் பத்தையும் அதன் பின்னான விளைவுகளையும் அவற்றின் பக்கவிளைவுகளையும், நாங்கள் யாருமே மறுப்பதற்குமில்லை, மறைப்பதற்கும் இல்லை.
இருந்தும், கால நிர்ப்பந்தங்களையும் புதிய உலக ஒழுங்கையும் சரிவரப் புரிந்து நம் தலைமை சர்வதேசங்களுமறிய நம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் சுமைகளைக் குறைப்பதற்காக இறுதியாகச் செய்த அவ்வுடன்படிக்கையின் கதி, என்னவாயிற்று??
ஏறத்தாழ முந்நூற்று எண்பது நாட்களுக்கு முன் ஒருதலைப்பட்சமாக அவ்வொப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேறி, கொக்கரித்துக் கொண்டும் சூளுரைத்துக் கொண்டும் வஞ்சகமாக நம் மக்களைக் கொன்றொழித்தும் ஆண்டாண்டுகளாய் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களை அழித்தொழித்து வன்பறிப்புச் செய்தும் வரும் சிங்களத்தின் உண்மைப் பேரினவாத முகம் உலகிற்குப் புரியாவிட்டாலும் - புரிந்தும் புரியாதவர்களாய் இருந்து கொண்டாலும், எவர் என்ன சொன்னாலும், ஆறரைக் கோடி தமிழ் மக்களான உங்களுக்கு இப்போ நன்கு தெரிகிறது என்பதும் வேறுபாடுகளை மறந்து நீங்கள் கொடுக்கும் ஒருமித்த குரலும் எமக்குப் பெருந்தொல்லைகளின் மத்தியிலும் பேருவகை அளிக்கவே செய்கிறது.
அதே வேளை, புலத்தின் வளத்தில் மக்கள் பலத்தில் களத்தில் நிற்கும் நம் வீரருக்கும், வாழ்க்கையே போராட்டமாகவும் போராட்டமே வாழ்க்கையாகியும்விட்ட பின்தளத்து மக்களுக்கும் நேரடியாகக் கவசமாய் இருந்து உங்களால் காப்பாற்ற முடியாதிருந்தாலும், பட்டினி கிடந்து அவல வாழ்வு வாழும் நம் சொந்தங்களுக்காக மனிதாபிமானத்துடன் நீங்கள் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒன்றுபட்ட உணர்வோடு அனுப்பியவை போன்று தற்போதும் அனுப்ப முயல்கின்ற அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் வந்து சேர்வதற்குள், ஆக்கிரமிப்பாளனுக்கு, வேண்டியளவு போர்த் தளபாடங்களும் உதவியாகப் படையினரும் உவ்விடமுள்ள தொடருந்தில் ஏற்றப்பட்டுக் கப்பல் கப்பலாக இங்கு வந்திறங்கியதாக அறிந்த போது, அதிர்ச்சியில் திகைத்தே விட்டோம்.
அவை மட்டுமா? எம் மக்களை வல்வளைப்Ī
