|
யாழில்
இருந்து ஒரு தமிழ் மகன் புலம்பெயர் தமிழர்களுக்கு....
ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கள் அறிவீர்கள். எமது இனம்
அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வன்னியில் வசிக்கும் எம் உடன்பிறப்புக்கள் கொடூரமாக இலங்கை அரச
இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கு இந்திய அரசும் துணை போகின்றது. அகிம்சை வழியில் சுதந்திரம்
பெற்றதாக மார்தட்டிக்கொள்ளும் இந்திய அரசுக்கு இந்தியாவில் அகிம்சை
வழியில் போராடிக் கொண்டிருக்கும் எமது உடன்பிறவா சகோதரர்கள்
சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதை மதிக்காமல் இலங்கைக்கு யுத்த
டாங்கிகளையும் மற்றும் போர்த் தளபாடங்களையும் அனுப்பிக்
கொண்டிருக்கின்றது. இதுவா காந்தி தேசத்தின் அகிம்சைத் தத்துவம்.
இனியும் இந்தியாவை நம்பமுடியாது. நாம் எமது சொந்தக் கையைத்தான்
நம்பவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் எம்மால் அகிம்சை முறையில் போராட முடியாது.
அப்படி நாங்கள் சிலர் கூடிநின்று பேசினாலே மக்களோடு மக்களாக
கலந்திருக்கும் சில தேசத் துரோகிகளினனால் இராணுவத்துக்குக் காட்டிக்
கொடுக்கப்படுவோம்.
திங்கள் முதல் இங்கு பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் கல்விச்
செயற்பாடுகளை நிறுத்தி பல்கலைக்கழகத்தை நடக்காமல் பண்ணியுள்ளனர்.
இதற்காக இங்கு எத்தனை மாணவர்கள் கொல்லப்படப் போகின்றார்களோ
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
புலம்பெயர் தமிழர்களாகிய உங்களால்தான் இலங்கை அரசின் அட்டகாசத்தை
நிறுத்தமுடியும். நீங்கள் வாழும் நாட்டின் மனச்சாட்சியை
தட்டியெழுப்பும் வண்ணம் உங்கள் போராட்டம் தொடராக நடத்தப்படவேண்டும்.
வருகிற 4ம் திகதி நடக்கவுள்ள போராட்டத்தை இன்று முதலே தொடர்ச்சியாக
நடத்துங்கள்.
இங்கு தற்போது இராணுவத்தினராலும் தேசத்துரோகிகளினாலும் இலங்கை
தேசியக்கொடி கட்டாயமாக ஒவ்வொரு கடையிலும் வாகனத்திலும்
கட்டப்படவேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டு கொடி கட்டப்படுகின்றது.
ஆகவே நீங்கள் தான் இலங்கை அரசின் பொய்ப்பிரசாரத்தை முறியடிக்கும்
வண்ணம் அகிம்சைப் போராட்டத்தை நடத்தவேண்டும். அன்பான உறவுகளே! உங்கள்
கைகளில்தான தமிழீழத்தின் விடிவு தங்கியுள்ளது.
இன்றும் கூட யாழ் மரியன்னை பெரியதேவாலயத்தில் நடக்கும் உண்ணாவிரதப்
போராட்டத்துக்கு செல்லும் மக்கள் இராணுவத்தால் தடுக்கப்பட்டு
எச்சரிக்கையின் பின்னர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
சிலர் மட்டும் எச்சரிக்கையையும் மீறி உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
ஈழத்தமிழன்
யாழ்ப்பாணம்
27.01.2009
|